;

Tuesday, May 17, 2011

தாங்குவோர் இன்றி(த்) தத்தளிக்கும் ஈழம்!


ஏமாற்றம் நிறைந்திருந்தாலும்,
என் முயற்சியில் சோர்வற்றவனாகி
அலைபேசியில் அவசரமாக
அதிகாரியை(த்) தொடர்பு கொண்டேன்,
வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள் 
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி
என் உரையை ஆரம்பித்தேன்!


ஈழத்திற்கான தீர்வு
இந்த மாதம் கிடைக்கும் 
என உறுதியளித்தீர்களே,
இன்னமும் காணவில்லையே,
என கேட்டேன்;

இல்லையே, 
முள்ளி வாய்க்கால் முடிந்த
முதல் நாள் தொடங்கி
இன்று வரைக்கும்
இதையே தான் உரைக்கிறோம்
என இறுமாப்புடன் பதில் சொன்னார் அவர்,

அப்போ எங்களுக்கான 
தீர்வுப் பொதி எங்கே என
ஏளனமாய் மீண்டும் 
வினா(த்) தொடுத்தேன்,
அதிகாரியின் குரலில்
ஒரு வித நடுக்கம்,
இதோ கப்பலில்
இந்து சமுத்திரத்தினூடே
வந்து கொண்டிருக்கிறது 
என சொன்னார்
மீண்டும் கேட்டேன்,
நிச்சயமாய் இந்த முறை ஏமாற்ற மாட்டீர்கள் தானே..

ஹா..ஹா. அதிகாரி 
ஆணவமாய் சிரித்தார்,
நடுக்கடலில் வரும் கப்பல் 
கரை தட்டினால் தான்
விடை தெரியும் என்றார்,
அலை பேசி(த்) தொடர்பை
அவராகவே துண்டித்தார்,

மீண்டும் பல மாதங்களின் பின்
நான் அலை பேசியில்
நேற்று அவரை
அழைத்தேன்,
இதோ, இந்தா வந்து விடும், 
இன்று வந்து விடும் 
என(ச்) சொன்ன, ஈழமெனும்
தீர்வுப் பொதி சுமந்த
கப்பலெங்கே?
ஆத்திரத்துடன் கேட்டேன்,

கப்பல் நடுக்கடலில்
புயலில் சிக்கி
தத்தளித்து, 
தாழத் தொடங்கி விட்டது 
என்று மழுப்பல் பதில் சொன்னார் அவர்;

கப்பலுக்கு என்ன நடந்தது?
அதிகாரி சொன்னார்,
கப்பலில் பெரும்பான்மையாக
பொருட்கள் நிறைந்திருக்கின்றன,
சிறுபான்மையாக உள்ள
தீர்வு பொதி- மட்டும்
ஒரு ஓரத்தில் இருந்தது,
தீடீரென எழுந்த பேரலைகளால் 
தராசின் செயலுக்கு ஒத்ததாய், 
சிறுபான்மை(த்) தீர்வு பொதி
தாழ(த்) தொடங்கி விட்டது,
அப்போ, எங்களுக்கான 
தீர்வின் பொதிக்கு(ப்) பதிலாக
என்ன தரவுள்ளீர்கள்?

மீண்டும் அதிகாரி சிரித்தார்,
பெரும்பான்மை மட்டும்
இப்போது நீரின் மேல்
மிதந்து கொண்டிருக்கிறது, 
நான் குறுக்கிட்டேன்,
கப்பல் தாழுகையில்
பெரும்பான்மை தானே முதலில்
நீரினுள் அமிழ்ந்து விடும்,
அதிகாரி சொன்னார்,
நீர் என்ன குழந்தையா?
சிறுபான்மை தான்
தன் கைகளினால்
கப்பலின் மேல் தளத்தில் உள்ள
பெரும் பான்மையை 
தாளவிடாமற் தாங்கி(ப்) பிடிக்கிறது...

ஒரே ஒரு கேள்வி ஐயா,
கேட்கலாமா?
ஆம் என்றார்,
இறுதியாய் கேட்டேன்,
நீரினுள் தாழும்
தீர்வுப் பொதியை
மீட்க வழி இல்லையா?
அதிகாரி சொன்னார், 

’நீங்கள் இனத்தால் ஒன்று,
ஆனால் குணத்தால் வேறு
எல்லோரும் ஒன்றாய்
கடலுக்குள் இறங்கி
தாழும் தீர்வுப் பொதியை
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;
சில நேரம் 
உங்கள் முயற்சியின் விளைவாய்
அது கரை தட்டலாம்!  

நன்றி நாற்று

No comments:

Post a Comment