;

Saturday, April 24, 2010

ஐ.பி.எல் - மேட்ச் ஃபிக்ஸிங்!

ஐ.பி.எல் கமிஷனர் லலித் மோடி மீதான, குற்றச்சாட்டுக்களால் ஐ.பி.எல் இல் சூதாட்டம் நிகழ்வதில்லை, என மறுத்தவர்களும், நம்பத்தொடங்கியிருக்கின்றனர். அது தொடர்பான சர்ச்சைகளும் சூடுபிடித்துள்ளன. 'எனக்கு இன்னும் தெரியவில்லை! யாரிந்த சூதாட்டம் தொடர்பான புதிய புரளிகளை
உருவாக்கி விடுகிறார்கள்!?'என பொறிந்து தள்ளியிருக்கிறார் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா. (ஐ.பி.எல் - கேலரி)
விறுவிறுப்பான ஆட்டங்களினால், உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை மெதுமெதுவாக தன்னுள் ஈர்க்கும், ஐ.பி.எல் போட்டிகள், மீது விழுந்துள்ள இத்திடீர் அவதூறு, காலத்தின் கட்டாயம் என கூறலாமா?
உண்மையில் ஐ.பி.எல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நிகழ்கிறதா? அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பின்றி, ரசிகர்கள் வெறுமனே தமக்குள் 'பேட்டிங்' (Betting) செய்துகொள்கிறார்களா? என பல சந்தேகங்கள் எழும் முன், அண்மையில் கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான வலை ரசிகர்களை தன்பக்கம் கொண்டுள்ள கிரிக்கின்போ (Cricinfo.com) அறிமுகப்படுத்திய புதிய விளையாட்டு, (Bet365) பந்தயம் பிடிப்பதென்றால் என்ன என தெரியாதவர்களுக்கும், இப்படித்தான் என சொல்லிக்கொடுக்க தொடங்கியுள்ளது.

ஐ.பி.எல் இல் முதல் மூன்று நிலைகளுக்குமான ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் உருவெடுத்துள்ள இச்சூதாட்ட சர்ச்சை, வரும் ஏப்ரல் 30 ம் திகதி ஆரம்பகாமவுள்ள உலக கிண்ண டுவெண்டி20 போட்டிகளுக்கும் தொடருமா என்ற கேள்விகளுடன் அண்மையில்  வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை, அதன் பயன் கருதி, அவ்வலைப்பதிவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கிறோம்
- 4tamilmedia குழுமம்
ஐபிஎல்-மோடி விவகாரம் கிரிக்கெட்டை மட்டுமில்லாமல் நாட்டில் நடக்கும் சகலவிஷயங்களையும் அமுக்கிவிட்டது. ஐபிஎல்-ன் வெள்ளை அறிக்கை படிப்பதுபோல ஐபிஎல் தொடர்பான விவரங்கள் புதிது புதிதாகக் கைக்குக் கிடைக்கின்றன. இப்போது  வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஐபிஎல் மீது புதிய அஸ்திரம் வீசப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதை விடவும் கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கு சாதகமாகிவிட்டது. ’நான் சொல்லலை, எல்லாமே ஃபிக்ஸிங்தான்...’ என்கிற பழைய பல்லவியைப் பாடத் தொடங்கி விட்டார்கள்.
கிரிக்கெட்டில் ஈடுபடுவர்கள் அத்தனை பேரும் யோக்கியர்கள் என்று சொல்லிவிடமுடியாது. சமீபத்தில்கூட கவுண்டி மேட்சில் மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக இரு வீரர்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. ஆனால் இந்தியாவில் மனோஜ் பிரபாகர், அசாரூதினுக்குப் பிறகு யார்மீதும் எந்தவொரு சந்தேகப் பார்வையும் விழவில்லை. காரணம், இங்கு நிலவும் சூழல். மட்டுமில்லாமல், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள், பிறகு பட்ட அவஸ்தைகளை எல்லோரும் நன்கு அறிந்தே இருக்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்ஸிங் செய்துதான் நன்றாகச் சம்பாதிக்கமுடியும் என்கிற அவலம் இன்றைக்குக் கிடையாது. 29 வயதுக்குள் தோனி எட்டு கோடி வருமான வரி கட்டுகிறார் என்றால் அவருடைய வருமானத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும் இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகள் பெற்று வருவதால் வீரர்களுக்கு அடிக்கடி பரிசுத்தொகையும் ஸ்நேகாவை விடவும் அதிக  விளம்பரங்களும் கிடைக்கின்றன. இத்தனையும் தாண்டி ஒரு பெரிய தொகை வெளியிலிருந்து கிடைத்து அதற்காக வீரர்கள்  தங்கள் திறமையை விட்டுக்கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை. விட்டுக்கொடுக்க திறமை என்ன பேனா, பென்சிலா?

மற்ற எல்லா துறைகளை விடவும் கிரிக்கெட்டுக்கு ஒரு விசேஷம் உண்டு. வெளிச்சம். சினிமா நட்சத்திரங்களை விடவும் கிரிக்கெட் வீரர்கள்தான் அதிக பேரும் புகழும் பெறுகிறார்கள். இவர்களுடைய வெற்றிகளுக்கு மட்டும்தான் ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு சுல்தான் வாழ்க்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால் இந்த இத்தனையும் ஒருவர் அனுபவிக்கவேண்டும் என்றால் அவருக்கென்று சில தகுதிகள் இருந்தாகவேண்டும். கிரிக்கெட்டை பிஸினஸாக எண்ணுபவருக்கு இந்த விளையாட்டு லாயக்கில்லை. அசாத்திய திறமை, தீவிரப் பயிற்சி, தேசப்பற்று, குழு மனப்பான்மை என்று பல வித்தைகளும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருப்பவருக்கே இந்த விளையாட்டு சாத்தியமாகிறது.

 நல்லவேளை, இந்தியாவில் சச்சின், திராவிட், கும்பிளே, கங்குலி, லஷ்மண் என்று சில நல்ல உதாரணங்கள் உண்டு. இவர்கள் ஒருபோதும் மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான எந்தச் சர்ச்சைகளிலும் ஈடுபட்டு பேரைக் கெடுத்துக்கொண்டது கிடையாது. இந்திய அணியின் மோசமான காலகட்டத்தில் இவர்கள் அணிக்காக ஆடியிருக்கிறார்கள். அப்போது இவர்கள் வாங்காத அர்ச்சனைகள் கிடையாது. அத்தனையும் எதிர்கொண்டு தங்கள் திறமை, உழைப்பு மூலமாக இந்திய அணியை இன்று உயரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியில் உள்ளதுபோல ஒருவர் காலை இன்னொருவர் இழுக்கும் குணம் இந்திய அணியில் இல்லை. இதனால் கிரிக்கெட்டில் ஈடுபடும் இளம் தலைமுறையினர் இவர்கள் அடைந்த உயரத்தை தங்களுடைய பெஞ்ச் மார்க்காக வைத்துக்கொள்கிறார்கள். பணமா, சச்சினுக்கு நிகரான புகழா என்றால் ஒரு கிரிக்கெட் வீரர் எதைத் தேர்ந்தெடுப்பார்?

 மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டால் ஒரு மேட்சுக்கு காசு வரும். பிறகு? அணியில் இடமில்லாமல் போனால் ஏது நிரந்தரமான பணம், புகழ்? கிரிக்கெட்டுக்கு வெளியேதான் பெட்டிங்கில் ஆரம்பித்து ஆயிரம் பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றன. திருட்டு டிவிடி அடித்து ஒருவர் பிழைப்பது போலத்தான் அதுவும். ஒரு சினிமா எப்படி இருக்கவேண்டும் என்பதை திருட்டு டிவிடி விற்பவர் தீர்மானிக்க முடியாது. ஆனால் அவருடைய பிழைப்பு, சினிமாவை நம்பித்தான். அதுபோலவே கிரிக்கெட்டுக்கு வெளியே நடக்கும் சூதாட்டமும் இதரப் பித்தலாட்டங்களும். அதற்கும் வீரர்களின் பங்களிப்புக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது என்றே நான் நம்புகிறேன்.

  கிரிக்கெட் பிட்சை ஒரு கூட்டம் வெட்டி எடுத்தபோதும், மைதானத்துக்குள் குண்டு வைக்கப்பட்ட போதும், ஏன் கிரிக்கெட் வீரர்கள்மீது ராக்கெட் லாஞ்சர்கள் வீசப்பட்ட பிறகும்கூட கிரிக்கெட் ஜீவித்துக்கொண்டுதான் இருக்கிறது.  மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம், மோடி, ஐபிஎல் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அதற்கென்று ஒரு பிரச்னை தேடி வரும். ஒவ்வொரு பிரச்னையின்போது கிரிக்கெட் மேலும் வலுப்பெறுவதுதான் அதன் வாடிக்கையாக இருக்கிறது.     
நன்றி -

ச.ந. கண்ணன்

(ஆட்டமா, சூதாட்டமா?)

நன்றி//ww1.4tamilmedia.com 

No comments:

Post a Comment