;

Saturday, August 4, 2012

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல...


பனங்காடும், வயல் வெளிகளும்
பரந்துகிடக்கும் ஊரது.
நீலக்கடல் அலை தாலாட்டும்
நிர்மலமான நிலமது.
பனங்கிழங்கும், பனாட்டும்
பஞ்சமின்றிக் கிடைக்கும்.

பெருங்கடல் மீனும், நந்திக் கடல்
நண்டும், இறாலும்
நாள்தோறும் இங்கு நயமாகக் கிடைக்கும்.
காளி கோவிலில் கட்டுக் கேட்பவர்கள்
திங்களும், வெள்ளியும்
திரளாகக் கூடுவர்.
வடிவேலு குஞ்சையாவின்
நேசன் மணம் முடித்ததும்
இம் மண்ணில்தான்.
உறவுகள் சூழ தட்டிவானில் சென்று
மணமக்களை வாழ்த்தியது
நெஞ்சப் பசுமையில்
இன்றும் நிறைந்து கிடக்கின்றது.
குஞ்சி அம்மாவின் செல்லன் தம்பியும்
கனகசபை அண்ணாவின் றஞ்சனும்
வாழ்க்கைத் துணையோடு
இணைந்தது இம்மண்ணில்தான்.
சோமண்ணையின் தங்கை நிர்மலா
கரம்பிடித்ததும் இவ்வூரில்தான்.
காலபோக நெல்லும்,
பட்டை இறைப்பு வெங்காயமும்,
பச்சைப்பசேல் என்ற கீரையும்
பசுமை மாறா புண்ணிய பூமி இது.
அமைதியாக, பசுமையாக,
புன்னகை முகத்துடன் பூரித்த மண்
2009 வைகாசியில்
இருண்ட முகமாகியது.
எம் இனத்திற்கு நடந்த அநீதி கண்டு
குமுறி அழுதது.
இம் மண்ணில் நம் இனம் குதறப்பட்ட
கொடூரத்தை என்னால் எழுதமுடியாது
கை நடுங்குகிறது,
கண்ணீர் வழிகிறது,
நெஞ்சு கனத்து
தொண்டை அடைக்கின்றது.
58, 77, 83 இவற்றோடு
2009ம் சேர்ந்ததோ?
நீண்ட பெருமூச்சோடு
இறுதி வரிகளை
இறுக்கமுடன் எழுதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலோடு எம்முழு வீரமும்
மடிந்து போகவில்லை.
எம் விடுதலைக் கனவும்
முடிந்து போகவில்லை.
முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல. கம.
- முல்லை சதீஸ்

No comments:

Post a Comment