;

Saturday, August 4, 2012

இப்போது விட்டால் இனி எப்போதும் இல்லை



ழத் தமிழர் எழுச்சியில், தமிழ் ஈழம் என்ற கனவின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு மகத்தானது. ஆனால் அதற்கு சற்றும் குறையாத பங்கு அவற்றை உருத்தெரியாமல் அழித்ததிலும் இந்தியாவுக்கு
உண்டு!
எவ்வளவு பெரிய தேச பக்தராக இருந்தாலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. மனிதாபிமானமும் இன உணர்வும் கொண்ட ஒவ்வொரு இந்தியத் தமிழருக்கும் இந்தக் குற்றவுணர்ச்சி கடைசி வரை இருந்தே தீரும், ஈழத்தமிழர் எழுச்சிக்கும் தனி நாடு கனவுக்கும் உரம்போட்டவர்கள் நாமே என்பது உண்மையாக இருந்தாலும் கூட!
ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆயிரம் அரசியல், மாச்சர்யங்கள் இருந்தாலும், தங்களது பிரச்சினை தீர அவர்கள் நம்பியது இந்தியாவையும் தமது உறவுகளான தாயகத் தமிழர்களையும்தான். ‘இந்தியா எங்களது தந்தை தேசம்’ என்ற அவர்கள் கருத்து இன்னும் கூட மாறாமல்தான் உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் இருந்தவரை, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு மிகத் தெளிவாக இருந்தது. சுயாட்சி அமைப்பு அல்லது தனித் தமிழீழம் என்ற இலக்கை நோக்கி மட்டுமே இந்த இரு தலைவர்களும் செயல்பட்டார்கள். ஜெயவர்தனவுக்கு பெரும் நெருக்கடியைத் தர போராளிக் குழுக்களையும் வளர்த்துவிட்டார்கள். பண, ஆயுத, போர்ப் பயிற்சி உதவிகளை தாராளமாகச் செய்தார்கள்.
ஆனால் இந்த உதவிகளை இந்திய ராணுவத்துக்கே எதிராகத் திருப்ப வைத்த ‘பெருமை’ முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு மட்டுமே உண்டு!
அட்சதை போடப் போனவன் தாலியைக் கையிலெடுத்துக் கொண்டதுபோல, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவின் போக்கு அமைய, முதல் கோணல் அங்கே ஆரம்பித்ததது. அதன் பிறகு இந்தியா செய்ததெல்லாம் ஈழ மக்களுக்கு எதிராகவே முடிந்தது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, ஈழப் பிரச்சினையில் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த இந்தியா, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தமிழர் போராட்டத்தை முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசுக்கு உற்ற தோழனாய் மாறிப்போனது.

இதற்கிடையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் நிகழ்ந்தது. போராளிகள் கொஞ்சம் சாவகாசமாய் இருந்த காலத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குள் பெரும் பிளவை உண்டாக்குவதில் வெற்றி பெற்றிருந்தது இலங்கை. உட்பகையை வெல்ல புலிகள் மோதிக் கொண்டிருந்த தருணத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கூறிக் கொண்டு உலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டனின் ஆதரவைப் பெற முயன்றது இலங்கை.
இந்தச் சூழலை இலங்கைக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் திடீரென இந்தியா பெரும் முனைப்பு காட்டியது. ராஜீவ் மரணத்துக்குப் பழி வாங்கும் போராக இதை இந்தியா பார்த்தது. ராஜபக்சேவே முன்பு ஒப்புக் கொண்டது போல, புலிகள் மீது இந்தியா தொடர்ந்த போரை இலங்கை நடத்தியது. சீனாவும் இஸ்ரேலும் வேண்டிய ஆயுதங்கள் தந்தன. தமிழகம் வழியாகவே இந்திய ஆயுதங்கள் சிங்களப் படைகளுக்குப்போயின. சென்னை தாம்பரத்திலும், பெங்களூரிலும் விமானப் பயிற்சி தரப்பட்டது சிங்களர்களுக்கு.
சூழ்நிலைகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக மாறியதும் விடுதலைப் புலிகளுடன் போர் என்ற பெயரில் தமிழினத்தையே அழிக்கும் படுபாதகத்தில் இறங்கியது சிங்களம்.
ஐநா அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப் போல மனித இன வரலாற்றில் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு கொடூரங்கள் அரங்கேறின, தமிழர்களுக்கு எதிராக.
பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். உலகில் தடை செய்யப்பட்ட அத்தனை வகை ரசாயண ஆயுதங்களையும் தமிழர்களுக்கு எதிராக வன்னிப் போரில் பயன்படுத்தியது இலங்கை. அதற்கு உற்ற துணையாய் நின்றது இந்தியாவும் சீனாவும். விளைவு, உலகம் முழுக்க தமிழர் வீதி வீதியாக எழுப்பிய கூக்குரல் எடுபடாமலேயே போனது.
முள்ளிவாய்க்காலில் ஒரேயடியாக முடக்கப்பட்டது ஈழத் தமிழரின் ஆயுத ரீதியிலான போராட்டம். தமிழர்களின் உயிர் என்பது வெறும் நம்பர்களாக மாறிப் போன கொடுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இப்போது நினைத்தாலும் நெஞ்சில் ரத்தம் வடியும் கோர நாட்கள்!
இந்த துயரத்தை துடைக்கவும் ஆளில்லை, அமைப்பு ரீதியாக எடுத்துச் சொல்லவும் தலைவர்களற்ற நிலை. தாய்த் தமிழகத்திலோ ஈழத் தமிழர்களின் துயரம் என்பது இரண்டரை மணி நேர சினிமா மாதிரிதான். இவர்களுக்கு அது ஒரு துன்பியல் பொழுதுபோக்காகிப் போனது. நினைத்தால் உண்ணாவிரதம், வாபஸ், அதை வைத்து ஆயிரம் அரசியல், புதிதாக களம் இறங்குவோருக்கு பப்ளிசிட்டி… என பல வகையிலும் ஈழத் தமிழ் அரசியல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இலங்கை தமிழ் அரசியல் களமோ, படுகேவலம். அவர்களை அரசியல்வாதிகள் என்றால், அந்த வார்த்தையே அசிங்கப்பட்டுப் போய்விடும்! சந்தர்ப்பவாதம் என்பதற்கு மிகச் சரியான உதாரணமாகத் திகழ்ந்தவர்கள், புலிகளுக்குப் பிந்தைய காலப்பகுதியில் உள்ள இந்த அரசியல்வாதிகள்தான்.
இப்படி எல்லா பக்கமும் கைவிடப்பட்ட, நம்பிக்கையற்ற ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கைக் கீற்றாய் வந்திருக்கிறது ஐநா சபையின் நிபுணர் குழு அறிக்கை. அதுகூட அப்படியொன்றும் முழுமையான வெளிச்சமல்ல. ஆனால் தத்தளிக்கிறவனுக்கு கிடைத்த முதல் பிடிமானம் போன்றது.
இத்தனை காலமும், ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சொல்லி வந்த குற்றச்சாட்டுகளை அப்படியே பிரதிபலித்திருக்கிற அந்த அறிக்கை, இலங்கை என்ற சிங்கள இனவாத அரசின் வெறித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கை மண்ணில் தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழ முடியாத சூழலை தெளிவாக்கியுள்ளது.
போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் புலிகளின் பங்கையும் சேர்க்கத் தவறவில்லை!

தன் சொந்த மக்களையே ஈவிரக்கமின்றி புழுக்களைப் போல நசுக்கியும் மிதித்தும் துண்டு துண்டாக சிதைத்தும் சிங்கள அரசு கொன்று குவித்ததும், பல்லாயிரம் மக்களை பட்டினி போட்டுக் கொன்றதும் அம்பலமாகியுள்ளன.
இறுதிப் போரின்போதுகூட கிட்டாத ஒரு சந்தர்ப்பம் இப்போது தமிழருக்குக் கிடைத்துள்ளது. ஆயுதப் போராட்டம் தராத பலனை, இப்போதைய சூழல் தர வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, தமிழர்களின் உற்ற தோழன் தானே என இந்தியா நிரூபிக்க வேண்டும் என்பதே உலகெங்கும் உள்ள தமிழர்களின் பேரவா. ராஜபக்சே என்ற மனித குல அவமானத்தை துடைத்தெறிய இந்தியா இப்போதாவது முன்வர வேண்டும். சந்தேகத்துக்கிடமின்றி ஒரு போர்க்குற்றவாளியாகக் காட்சி தரும் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களை சர்வதேச நீதிமன்றக் கூண்டிலேற்றி தண்டிக்க வேண்டும்.
தமிழருக்கு உரிய நீதியை,அவர்கள் நிம்மதியாக வாழும் தனி நிலப்பரப்பொன்றை அவர்களுக்குத் தரவேண்டும். அதற்கான அங்கீகாரம் தரும் முதல்நாடாக இந்தியா திகழ வேண்டும். ராஜீவ் கொலைக்கான பழிவாங்கல் போக்கை இனியும் தொடர்வது, உலக அரங்கில் இனப்படுகொலையின் பங்காளி என்ற பட்டத்தைத்தான் இந்தியாவுக்குப் பெற்றுத்தரும்!
இதனை இப்போது செய்யாவிட்டால், வேறெப்போதும் இந்தியாவால் செய்ய முடியாது! இதற்கான ஒருமித்த அழுத்தங்களை தமிழர் தலைவர்கள் இனியாவது ஓரணியில் நின்று செய்ய வேண்டும். செய்வார்களா?

-என்வழி

No comments:

Post a Comment